search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேகம்"

    • எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
    • இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாமன்னர் ராஜராஜசோழன் 1039-வது சதயவிழா நடந்து வருகிறது. விழாவில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.

    பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா சிறப்பாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியகோவில் மிக புண்ணியம் பெற்றது. திருவிசைப்பா பாடல் பெற்ற தலம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் ஏற்ப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்து உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதனையாக ராஜராஜசோழன் செய்துள்ளார். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக ராஜராஜ சோழன் விளங்கினார். உலகம் முழுவதும் சென்று தனது வீரத்தை பறைசாற்றி நமக்கு திருமுறையை மீட்டுக் கொடுத்தவர். திருச்சி உய்யக்கொண்டான் மலையில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு அனைத்து ஆதீனங்களும் வருகிறார்கள்.

    அப்போது சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம். தற்போது உள்ள அரசு ஆன்மீக அரசு.

    எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து, அதிகளவில் கும்பாபிஷேகம் செய்வதை சாதனையாக கருதுகிறேன்.

    தமிழகத்தில் பெரிய கோவில்கள் மட்டுமின்றி, சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகத்தை இந்த அரசு நடத்துவதை சாதனையாக பார்க்கிறேன். பெரிய கோவில்களை காட்டிலும், கிராம கோவில்களின் உண்டியல் வருமானம் அதிகளவில் உள்ளது. கிராம கோவில்களை யாரும் பராமரிக்காமல் சென்று விடக்கூடாது என்பதற்காக, அந்த கோவில்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.

    இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் ஆதீனத்திற்கு சொந்தமான ரூ.400 கோடி மதிப்பிலான நிலங்கள், திருச்சியில் ரூ.500 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள், 500 வீடுகள் ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.
    • திருச்செந்தூரில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் ரூ. 200 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலுடன் இணைந்த மானூா் அம்பலவாண சுவாமி கோவிலில் இன்று அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் 2021-22-ம் ஆண்டில் 1000 ஆண்டுகள் தொன்மையான கோவில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோவில்களில் குடமுழுக்கு நடத்த ரூ. 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தொடர்ந்து 2023-2024, 2024-2025 என 3 ஆண்டுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் ரூ. 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று வரை நெல்லை மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுடன் சேர்த்து 2098 கோவில்களில் கும்பாபிஷேகம் இதுவரை நடந்துள்ளது. இன்று மட்டும் 55 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 250 கோவில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் திருத்தேர் பராமரிப்பு, தேர் கூடம் அமைத்தல், தெப்பக்குளம் பராமரித்தல் என நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது.

    மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு சொந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்கு விடப்பட்டு அந்த தொகை கோவிலின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான 16 கோவில்களுக்கும், நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட 60 கோவில்களுக்கும் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    805 கோவில்களுக்கு சொந்தமான ரூ. 6 ஆயிரத்து 703 கோடி மதிப்புள்ள சுமார் 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் தி.மு.க. ஆட்சியில் தான் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் கோவிலின் பெயர்கள் இடம் பெறும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் தான் ரூ.92 கோடி செலவில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ.59 கோடி செலவில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.11.93 கோடி செலவில் மரத்தேர் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ரூ.28 கோடியே 44 லட்சம் செலவில் 172 கோவில்களில் மரத்தேர் கொட்டகைகள் அமைக்கும் திருப்பணிகள் நடந்து வருகிறது. ரூ.29 கோடி செலவில் 5 புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இன்னும் ஓரிரு மாதத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் தங்கத்தேர் பணி நிறைவு பெறும். 9 வெள்ளித் தேர் சுமார் ரூ.27 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.120.33 கோடி செலவில் 220 குளங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது.

    ரூ.321 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 187 கோடி மதிப்பீட்டில் 28 பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. ரூ. 136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள், 500 வீடுகள் ஆகியவை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.

    ரூ.1530 கோடி செலவில் 19 கோவில்களில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருச்செந்தூர், பழனி உட்பட கோவில்களில் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து இவ்வாறு திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்கால ஆட்சி.

    திருச்செந்தூரில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் ரூ. 200 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு இந்து சமய அறநிலைத்துறை எவ்வித இடைஞ்சலும் கொடுக்கவில்லை.

    அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதிக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் அதற்கு உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் கோவிலில் உள்ள வெள்ளித்தேர் மற்றும் உள்தெப்பம் அருகே கட்டப்பட்டு வரும் ஆராட்டு மண்டபத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே ரத வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் நெல்லையப்பர், காந்திமதியம்மன் உள்ளிட்ட 5 தேர்களை அவர் ஆய்வு செய்தார்.

    5 தேர்களையும் மழைக்காலத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிமெண்ட் தளம் அமைக்கும் பணியையும் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

    • 143 கோவில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோவில்களில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 7.5.2021 முதல் 31.1.2024 வரை மூன்றாண்டுகளில் 1,355 கோவில்களில் திருப்பணிகள் நிறைவுற்றுத் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றுள்ளன.

    8,436 கோவில்களில் 18,841 திருப்பணிகள் ரூ.3,776 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு 5,775 திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    2021-2022-ம் நிதியாண்டில் 1,250 கோவில்களுக்குத் திருப்பணி நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி வழங்கப்பட்டது. கிராமப்புற மற்றும் ஆதி திராவிடர் கோவில் திருப்பணிக்கான நிதி உதவி ரூ.2 லட்சம் வீதம் மேலும், 1250 கோவில்களுக்கு அனுமதிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

    143 கோவில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 கோவில்களில் புதிய திருக்குளங்கள் ரூ.2.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.

    சமயபுரம், திருவெண்ணெய் நல்லூர், திருப்பாற்கடல், தாராபுரம், அரியலூர், சென்னை கீழ்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோவில்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு கும்பிஷேகம் விழாக்கள் நடைபெற்றுள்ளன.

    15 கோவில்களில் ராஜகோபுரங்கள் ரூ.25.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. பட்டுக்கோட்டை, வரகுணநாத சுவாமி கோவில், 3 நிலை ராஜகோபுரம் இறையன்பரின் நிதியுதவி ரூ.50 லட்சத்தில் கட்டப்படுகிறது.

    அன்னதானத் திட்டம் இதுவரை 756 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 82,000 பேர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாண்டு மேலும் 7 கோவில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டிடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.5577.35 கோடி மதிப்பிலான 6140.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

    கடந்த மூன்றாண்டுகளில் 1,59,507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64,522 கற்கள் நடப்பட்டுள்ளன. நில அளவைப் பணியில் 172 உரிமம் பெற்ற நில அளவையர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4,189.88 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.

    ரூ.257.28 கோடியில் மொத்தம் 73 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்களின் நலனுக்காக 17 தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 48 குடியிருப்புகள் ரூ. 83.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. 6 கோவில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, 344.334 கி.கி தங்கக் கட்டிகளாக மாற்றி, ரூ.191.65 கோடி மதிப்பீட்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு வட்டி வருவாய் ரூ.4.31 கோடி வரப்பெறுகிறது. மேலும், 11 கோவில்களுக்குச் சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டுத் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில் ஒன்றுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 2,000 கோவில்களுக்கு அரசு மானியம் ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தற்போது 17,000 கோவில்கள் பயனடைந்து வருகின்றன.

    ஒரு கோவிலுக்கு ஓர் அர்ச்சகர் வீதம் பதிவு செய்து, மாத ஊக்கத் தொகை ரூ.1.000 வீதம் வழங்கப்பட்டு ஜனவரி 2024 வரை 15,753 அர்ச்சகர்கள் பயனடைந்துள்ளனர். அர்ச்சகர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகையாக தலா ரூ.10,000 வீதம் நடப்பாண்டில் 400 மாணவர்களுக்குக் கல்வித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பழனி கோவிலில் கம்பிவட ஊர்தி இயக்கப்பட்டு வருகிறது.

    80 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே கம்பிவட ஊர்தி, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைத்திட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்த 1,278 பணியாளர்கள் பணிவரன் முறை செய்யப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணங்கள் நடத்தி வைக்கும் திட்டத்தின்கீழ், ரூ.50,000 மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் 1,100 இணைகளுக்கும், 128 மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

    500 பக்தர்கள் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி, விசுவநாத சுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.125 லட்சம் செலவிலும், 1,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.1.50 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். 2022-2023-ம் ஆண்டில் முக்திநாத் ஆன்மிக பயணம் சென்று வந்தவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் பயண செலவாக வழங்கப்படுகிறது.

    கோவில்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தற்போது 212 மாணவர்கள் முழுநேரமாகவும், 80 மாணவர்கள் பகுதிநேரமாகவும் பயின்று வருகின்றனர்.

    11 பெண் ஓதுவார்கள் உட்பட 42 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்தகைய பல்வேறு பணிகளில் தமிழ்நாட்டின் அறநிலையத்துறை பணிகள் மிகச் சிறப்பாக நடைபெறுவதால் திராவிட மாடல் அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார்.
    • அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், இந்த கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார். அந்த தேங்காயில் 4 சில் இருந்தது.

    வழக்கமாக ஒரு தேங்காய் உடைக்கும் போது அதில் 2 சில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தேங்காயில் 4 சில் இருந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    இந்த அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.

    • 4 கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது.
    • பாதிரியார்கள் இருவரும் கோவில் கோபுரத்தின்மீது ஏறி கலசத்துக்கு புனித நீர் ஊற்றுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன். வீரனார் மற்றும் ஊருக்கு வெளியே காட்டில் காவல் காக்கும் அய்யனார் கோவில் என 3 கோவில்கள் அப்பகுதி மக்களால் திருப்பணி செய்யப்பட்டது.

    இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. இதன் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 4 கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது.

    இதனையடுத்து ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன், வீரனார் மற்றும் ஐயனார் கோயில் கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து நெல் பூக்கள் நவதானியங்களுடன் புனித நீரானது பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    இதில் கிராம நாட்டாண்மைகள், மண்டகபடி வகையறாவினர், நடுவலூர் ஜல்லிக்கட்டு பேரவை உட்பட 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் கிறிஸ்துவ பாதிரியார்கள் ராபர்ட், ஜோசப் தன்ராஜ் ஆகியோர் பங்கேற்றது.

    இது மதநல்லிணத்தை எடுத்துக்கட்டும் விதமாக அமைந்தது. கும்பாபிசேகம் நடைபெறும்போது பாதிரியார்கள் இருவரும் கோவில் கோபுரத்தின்மீது ஏறி கலசத்துக்கு புனித நீர் ஊற்றுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.

    இந்து கோவில் கும்பாபிஷேகத்தில் கிருஸ்வர்கள் கலத்து கொண்டது மத நல்லிணக்கத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையும் எடுத்துக்காட்டுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் கோவில்பட்டி கீழத்தெருவில் உள்ள அய்யனார் சந்தனகருப்பு சுவாமி மற்றும் பகவதி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 22-ம் தேதி முதல் நாள் அனுக்கை, தனபூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    மறுநாள் அதே யாகசாலையில் 2-ம் மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க குடம்,குடமாக கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது.

    அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கீழத்தெரு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த வடகரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை சிறப்பாக அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
    • முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தட்சிணமா நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    2-வது நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிறைவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ராமேசுவரம், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை பக்தர்களின் நேர்த்திக்காக உலா வரச் செய்துள்ளோம்.
    • இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசிடமிருந்து மானியமாக சுமார் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திட 2016-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களினால் குடமுழுக்கு தள்ளிப் போனது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கடந்த 2021 ஜூலை மாதம் கோவிலுக்கு வருகை தந்து ஆய்வு செய்தோம்.

    அதனைத் தொடர்ந்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் மீண்டும் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியதன் காரணமாக ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் 21 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. தமிழிலும் குடமுழுக்கு நடந்தது.

    இக்கோவிலை பொருத்தளவில் கடைசியாக எப்பொழுது குடமுழுக்கு நடைபெற்றது என்ற வரலாறே இல்லை. 1993-ம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

    இப்படி நீண்ட ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துகின்ற ஆட்சி இந்த ஆட்சி என்பதற்கு இதுவே சான்றாகும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 1,118 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்தேறி இருக்கின்றது.

    அதேபோல கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டதால் தங்கத்தேரானது பவனி வரவில்லை. தற்போது உபயதாரர்கள் நிதியுதவிடன் ரூ.3.04 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தேர் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் இன்றைக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது.

    கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணிகளில் இதுவரை ரூ.5,473 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 68 தங்கரதங்களும், 57 வெள்ளி ரதங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

    ராமேசுவரம், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை பக்தர்களின் நேர்த்திக்காக உலா வரச் செய்துள்ளோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பெரியபாளையம், புரசைவாக்கம் மற்றும் நங்கநல்லூர் ஆகிய திருக்கோவில்களுக்கு புதிய தங்கத்தேர் செய்திடவும், திருத்தணி, இருக்கன் குடி, சென்னை காளிகாம்பாள், திருக்கருக்காவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய கோவில்களுக்கு புதிய வெள்ளித்தேர்கள் செய்திடவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருத்தணி வெள்ளித் தேர் பணி நிறைவுற்று வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.

    அதேபோல் ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் 71 புதிய மரத்தேர்கள் உருவாக்கிடவும், ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 41 மரத்தேர்களை மராமத்துப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியானது இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்படுத்தி வசை பாடியவர்கள் எல்லாம் வாழ்த்துகின்ற நிலையை உருவாக்கி உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம், எம்மதமும் சம்மதமே என்று ஆட்சி நடத்துகின்றார். அதற்கு சாட்சியாக இன்றைக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு அருகில் உள்ள மசூதியில் இருந்து பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்களை வழங்கிய நிகழ்வே அமைந்துள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் சுதந்திரமாக மத வழிபாடுகளை செய்வதற்கு இந்த ஆட்சியிலே பாதுகாப்பு இருக்கின்றது என்பதற்கும் இதனை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 7,036 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 3000-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 4 ஆயிரம் கோவில்களுக்கும் திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசிடமிருந்து மானியமாக சுமார் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருகால பூஜைத் திட்டத்திற்கு ரூ.200 கோடியும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைக்க ரூ. 200 கோடியும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கோவில்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவினத்திற்கு ரூ.37 கோடியும், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடிட ரூ.3.25 கோடியும், ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்திற்கு ரூ. 1.25 கோடியும் என பல்வேறு திட்டங்களுக்கு அரசு மானியங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

    கடந்த ஆட்சி காலங்களில் இந்த அளவிற்கு அரசு மானியம் வழங்கப்பட்டதே இல்லை. எங்களை பொறுத்தளவில் சிறிய கோவில்கள், பெரிய கோவில்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து கோவில்களிலும் திருப்பணிகளை முழு வீச்சில் செய்துக் கொண்டிருக்கின்றோம். நீண்ட காலங்களாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அதனை ஆய்வு செய்து திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலங்காநல்லூர் அருகே பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் 'நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 2 கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நடுப்பட்டி கிராம பொதுமக்கள், செய்திருந்தனர்.

    • சங்கராபுரம் மரூர்புதூர் செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா மரூர் புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், பின் முதற்கால யாக பூஜை, விசேஷ திவ்யஹோமம், அதைத்தொடர்ந்து இரவு பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. பின் இன்று காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை, ஸாபர்சாஹீதி, காலை 9 மணிக்கு மஹா பூர்ணா ஹீதி, மஹா தீபராதனை நடந்தது.

    காலை 9.30 மணிக்கு கோபுர மஹா கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் தொடங்கிய விழா பின்னர் பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் குழுவினர் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.

    ×